பக்ரீத் பண்டிகையையொட்டிசிறப்பு தொழுகை நடத்தி அன்பை பரிமாறிய முஸ்லிம்கள்
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி அன்பை பரிமாறி மகிழ்ந்தனர்.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். உலக அமைதி, சகோதரத்துவம், அனைத்து மக்களும் அன்பாக வாழ வேண்டும் என்று தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி தேனி அல்லிநகரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேனி பழைய பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
தேனி புதிய பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பக்ரீத் பண்டிகையையொட்டி, கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் வாவேர் பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் பாக்கவி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. கம்பம் பாரஸ்ட் சாலை, எல்.எப். மெயின்ரோடு, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாக வாவேர் பள்ளி வாசலில் ஊர்வலம் நிறைவடைந்தது.
குர்பானி
பண்டிகையையொட்டி புதுப் பள்ளிவாசல், வாவேர் பள்ளி தெரு, கம்பம்மெட்டு காலனி, மைதீன் ஆண்டவர் பள்ளி, தாத்தப்பன்குளம், ஓடைக்கரைதெரு உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதேபோல் கம்பம் கம்பமெட்டு காலனியில் உள்ள மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், சிறப்பு தொழுகை நடைபெற்றது. போடி புதூர் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஆட்டு இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.