ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே கோரணப்பட்டு ஊராட்சிக்கான ஊராட்சி மன்ற அலுவலகம் அப்பியம்பேட்டை கிராமத்தில் கட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு ஊராட்சி மன்றம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டிடம் பலத்த சேதமடைந்ததால், அதனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் அகற்றினர். அதற்கு பதில் கோரணப்பட்டு கிராமத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பியம்பேட்டை மற்றும் பெலாந்தோப்பு உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பியம்பேட்டையில் தான் கட்டவேண்டும் என கூறி அங்குள்ள குள்ளஞ்சாவடி-காட்டுக்கூடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.