குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

குளித்தலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

சாலை மறியல்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் குமாரமங்கலம் பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு நிலத்தடி நீர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து சிவகங்கை கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக இந்த கிராம பகுதியில் சாலையின் ஓரத்தில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குழிகள் பறிக்கப்பட்டபோது ஏற்கனவே இருந்த குடிநீர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story