"மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்கும்"- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி


மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்கும்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 14 Nov 2022 2:55 PM IST (Updated: 14 Nov 2022 3:14 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் திருப்தியா இருக்காங்க..சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம் என சீர்காழியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சீர்காழி

சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி சென்றார். அங்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பச்சை பெருமாநல்லூரில் குடிசை வீட்டில் தங்கி இருந்த மக்கள் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2 ,000 நபர்களுக்கு அரிசு, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சீர்காழி, மயிலாடுதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளனர். இன்னும் சில குறைகள் மக்களிடம் இருக்கிறது. அதை இன்னும் ஐந்து, ஆறு நாட்களில் முழுவதுமாக தீர்த்து வைத்து விடுவோம்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் பற்றி கவலையில்லை.தெரிவித்த குறைகள் உடனடியாக சரி செய்யப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கணக்கீடு செய்த பிறகு அனைவருக்கும் நிவாரணம் அறிவிக்கப்படும்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்க்கட்சியில் இருந்து விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக கேவலப்படுத்துவதற்காக அரசியல் செய்வதற்காக, அப்படி கூறுவார்கள். அதை பற்றி எல்லாம் நாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு கணக்கெடுப்பு எடுத்து அந்த அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என கூறினார்.


Next Story