புதுச்சத்திரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


புதுச்சத்திரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:30 AM IST (Updated: 29 Jun 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே சீரான குடிநீர் வழங்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

புதுச்சத்திரம் அருகே தத்தாதிரிபுரம் ஊராட்சி 1-வது வார்டு வடக்கு தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 44 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த குழாய்கள் மூலம் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தால், ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தினரும் தவறான தகவல்களை தந்துவிடுவதாக கூறப்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைபிடிப்பு

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரான குடிநீர் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு நடத்தி குடிநீர் வினியோகம் செய்ய தத்தாதிரிபுரத்திற்கு நேற்று புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் சென்றனர்.

பின்னர் அங்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து ஆய்வு செய்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதியில் திரண்ட மக்கள் சீரான குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் வரும்போது மட்டும் தண்ணீர் வருவதாகவும், பின்னர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

எனவே ஊராட்சி தலைவர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை விடுவிக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுச்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீரான குடிநீர் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story