விவசாய சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை


விவசாய சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை
x

விவசாய சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி

சமயபுரம்:

வெட்டிக்கொலை

சிறுகனூைர அடுத்த எம்.ஆர்.பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம்(வயது 60). இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருடைய முதல் மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு நித்தியானந்தன்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து வங்காரத்தை சேர்ந்த வளர்மதியை(45) 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அவர் வங்காரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சண்முகசுந்தரம் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சண்முகசுந்தரம் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இடப்பிரச்சினை

மேலும் இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி கூடுதல் சூப்பிரண்டு கோபாலச்சந்தர் மேற்பார்வையில், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் சிறுகனூர் இன்ஸ்பெக்டர் சுமதி, சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன், லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்தை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஒருவர் வாங்கி உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் சண்முகசுந்தரம் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த இடத்தை வாங்கிய நபர்களுக்கும், சண்முகசுந்தரத்திற்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் ெதரியவந்ததாக கூறப்படுகிறது.

3 பேரிடம் விசாரணை

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சண்முகசுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்தேகத்திற்கிடமான 3 பேரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story