போலி கவுரவ டாக்டர் பட்டம் - அண்ணா பல்கலைகழகத்திற்கு போலீஸ் நோட்டீஸ்


போலி கவுரவ டாக்டர் பட்டம் - அண்ணா பல்கலைகழகத்திற்கு போலீஸ் நோட்டீஸ்
x

சினிமா பிரபலங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் சினிமா பிரபலங்களுக்கு போலியான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதில் தலைமை விருந்தினராக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். ஆனால் வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வள்ளிநாயகமும் தனியாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னுடைய கையெழுத்து மற்றும் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்கியதாக கூறியுள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கு போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கோட்டூர்புரம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Next Story