போலீசார் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்


போலீசார் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்
x

போலீசார் தங்களது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என வீரவணக்க நாளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி

பணியின் போது வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி 'காவலர் வீரவணக்க நாள்' அனுசரிக்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்ட போலீசார் சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலையில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது வீரமரணமடைந்த போலீசாருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டா்கள், ஆயுதப்படை போலீசார் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநாளில் நமது நாட்டுக்காகவும், மக்கள் பணியின்போதும் வீரமரணமடைந்த போலீசாரை நினைவு கூற வேண்டும். அவர்களது பணி நாட்டின் முக்கிய சேவையாக இருந்துள்ளது. போலீசார் தங்களது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story