பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியமுதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைநாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பள்ளி மாணவி கர்ப்பம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 16 வயது நிரம்பிய பள்ளி மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதி கொண்டு இருந்த அந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினர், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதுகுறித்து மாணவியின் தாயார் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடினார். வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி முனுசாமி குற்றம்சாட்டப்பட்ட வீரமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போலீசார், பின்னர் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.