126 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 126 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிரித்து உள்ளார்.
நெல்லை, ஏப்.8-
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 126 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தெரிரித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குண்டர் சட்டம்
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நெல்லை சரகத்தில் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை சரகத்தில் இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 126 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் நெல்லை மாவட்டத்தில் 36 பேர், தென்காசி மாவட்டத்தில் 20 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 பேர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பேர் என நெல்லை சரகத்தில் 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கஞ்சா வழக்குகள்
நெல்லை சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் 23 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் 320 பேரிடம் நிர்வாக நடுவரிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு, அதை மீறிய 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் ரூ.8.21 லட்சம் மதிப்பிலான 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.
பொருட்கள் மீட்பு
நெல்லை சரகத்தில் 46 சதவீதம் குற்ற வழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 55 சதவீதம் திருட்டு பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதாய கொலை, கூட்டு கொள்ளை, 37 வழிப்பறி, 56 வீடு உடைத்து திருடியது மற்றும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சரகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59 சதவீத குற்ற வழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 54 சதவீதம் களவு பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.