சென்னையை குப்பை இல்லா நகராக அறிவிக்க பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம் - சென்னை மாநகராட்சி
சென்னையை குப்பை இல்லா நகராக அறிவிக்க பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் அறிவிக்க பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லா மாநகராட்சியாகவும் அறிவிப்பு செய்தல் தொடர்பாக 200 வார்டுகளுக்கும் சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால் சென்னை மாநகராட்சிக்கு solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்ற முகவரிக்கோ கடிதம் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.