பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைவரும் கருப்பு பட்டை அணிந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனசேகரன், கிருஷ்ணபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் திரளான பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுப்பணித்துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி, சேமநல நிதியை சம்பளத்தில் பிடித்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.


Next Story