பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாகஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
பெரியகுளத்தில் கடந்த 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் நிலையம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அரசு பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 60 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. சிந்து தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சுவார்த்தையின்போது, சம்பவத்தன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான உண்மையான நபர்களை கண்டறிந்து அவர்களை மட்டும் கைது செய்வது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ் எண்ணிக்கையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் தற்போது மாங்காய் சீசன் நடைபெறுவதால் வெளியூரில் தங்கி இருப்பவர்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் தங்களது வீடுகளுக்கு வந்து செல்லலாம் என்றும் தெரிவித்தனர். இதில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.