திருக்கோவிலூர் அருகே பரபரப்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம் மீண்டும் சிலையை வைக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


திருக்கோவிலூர் அருகே பரபரப்பு    அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்    மீண்டும் சிலையை வைக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

சிலை அகற்றம்

திருக்கோவிலூர் அருகே விளந்தை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு விளந்தைக்கு சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து, போலீசாரிடம் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதேஇடத்தில் வைக்க வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றம்

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தனபால், பாமரன், மாநில நிர்வாகி கோட்டமருதூர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளா் அறிவுக்கரசு, நிர்வாகிகள் நாகேஸ்வரராவ், வெற்றி, வீரச்சந்திரன் சிவா, தர்மலிங்கம், வேல்பழியபால், அமுதா மற்றும் தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்க நிறுவன தலைவர் கமலகண்ணன், மாவட்ட நிர்வாகி அறிவுக்கரசன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை அதே இடத்தில் வைக்க கோரி கண்டன உரையாற்றினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அகற்றப்பட்ட சிலையை விளந்தை காலனி மாரியம்மன் கோவில் அருகே மூடிய நிலையில் வைப்பது எனவும், உரிய அனுமதி பெற்று சிலையை பஸ் நிறுத்தத்தில் வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story