ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
குன்னம்:
வருவாய் ஆய்வாளர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் தொட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்திராணி(வயது 40). இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் பிர்கா வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அய்யலூர் குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தத்தின் மனைவி முத்தரசி (40). இவர் தனது மாமனார் ராஜகோபால் பெயரில் உள்ள நிலத்தை தனது கணவர் முருகானந்தம் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளார்.
லஞ்சம் கேட்டார்
இதற்கான மனுவை விசாரித்த வருவாய் ஆய்வாளர் இந்திராணி, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தரசி, இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின்படி, நேற்று மதியம் கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற முத்தரசி, வருவாய் ஆய்வாளர் இந்திராணியிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
கைது
அந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் இந்திராணி வாங்கியபோது, அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்திராணியை கையும், களவுமான பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.