தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆட் குறைப்பை கண்டித்து பாதிரிக்குப்பம், எஸ்.புதூரில் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
கடலூர்
சாலை மறியல்
கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பல நாட்களாக கூலி வழங்கப்படவில்லை எனவும், சரிவர வேலை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் நேற்று காலை பாதிரிக்குப்பத்தில் கடலூர்- திருவந்திபுரம் சாலைக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள், ஏற்கனவே முறையாக வேலை வழங்கி கூலி வழங்கப்படாததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் வசதியானவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கொடுத்துவிட்டு, ஏழை-எளிய மக்களின் வேலையை பறிக்கிறார்கள். அதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றனர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் அருகே எஸ்.புதூரிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.