அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 ஆசிரியர்களிடம் ரூ.14¼ லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 ஆசிரியர்களிடம் ரூ.14¼ லட்சம் மோசடி
x

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 ஆசிரியர்களிடம் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

திருச்சி

திருச்சி, ஜூன். 15 -

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 ஆசிரியர்களிடம் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 48). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி காட்டூர் கைலாஷ் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அனந்த பத்மநாபன் ஆகியோர் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் கேட்டுள்ளனர்.

இதனை நம்பி தினகரன் அவர்களிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து உள்ளார். இதேபோல் ஆசிரியர்களான பாக்கியலட்சுமி, நரேஷ்குமார், மனோன்மணி, பிலோமினாள் ஆகியோரிடமும் அவர்கள் ரூ.9 லட்சத்து 31 ஆயிரத்தை பல்வேறு தவணைகளாக வாங்கினர்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் ராஜேஸ்வரியும், அனந்த பத்மநாபனும் பணி நியமன ஆணை தயார் செய்து பிலோமினாளிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த ஆணை போலி என தெரியவந்தது. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த 5 ஆசிரியர்களும் தாங்கள் கொடுத்த பணத்தை ராஜேஸ்வரியிடமும், அனந்த பத்மநாபனிடமும் திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்காமல் திட்டி உள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தினகரன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் புகார் கூறப்பட்ட ராஜேஸ்வரி, அனந்தபத்மநாபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story