பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மோசடி


பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மோசடி
x

கார் பரிசு விழுந்து இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி, மே.25-

கார் பரிசு விழுந்து இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஆர்டர்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருடைய மனைவி டயானா பிரியதர்ஷினி (வயது 32). இவர் கடந்த 5-ந் தேதி ஒரு ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் செயலி மூலம் கைப்பை வாங்குவதற்காக ஆர்டர் செய்து இருந்தார்.

சில தினங்களில் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், அவருக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்து இருப்பதாகவும், காரை பெற வேண்டுமானால் ரூ.12 ஆயிரத்து 800 வரி செலுத்த வேண்டும் என்றும், மேலும், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி டயானா பிரியதர்ஷினி பணத்தை செலுத்தியதுடன் வங்கி கணக்கு ஆவணங்களையும் செல்போன் மூலம் அனுப்பி வைத்தார்.

ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் மோசடி

அதன்பிறகும் பரிசு விழுந்ததாக கூறப்பட்ட காரை ஒப்படைக்காததால் அவர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அந்த நபர், காரை பெற ஜி.எஸ்.டி. கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தொகைகளை செலுத்த வேண்டியிருப்பதால் மேலும் பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து டயானா பிரியதர்ஷினி ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 800 பல்வேறு தவணைகளில் வங்கி மூலம் செலுத்தி உள்ளார். ஆனாலும் அவருக்கு பரிசு காரை தரவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து சைபர்கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story