சேலம் சிறை வார்டர் பணி இடைநீக்கம்
கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சேலம் சிறை வார்டர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உறவினர் பெயரில் சிம்கார்டு வாங்கி பேசியது அம்பலமாகி உள்ளது.
கைதியின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய சேலம் சிறை வார்டர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உறவினர் பெயரில் சிம்கார்டு வாங்கி பேசியது அம்பலமாகி உள்ளது.
சிறை வார்டர்
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 27). இவர் சேலம் மத்திய சிறையில் 2-ம் நிலை சிறை வார்டராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவரை பார்க்க அவரது மனைவி அடிக்கடி சிறைக்கு வந்து உள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த வார்டர் விஜயகாந்த், கைதியின் மனைவி செல்போன் எண்ணை பெற்று உள்ளார். பின்னர் அந்த எண்ணில் வாட்ஸ் அப் கால் மூலம் அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக அந்த பெண் சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத்திடம் புகார் தெரிவித்தார்.
நேரில் விசாரணை
இதையடுத்து வார்டர் செல்போன் எண்ணை கைப்பற்றி, விசாரணைக்காக சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தார். அந்த அறிக்கை பெற்ற அவர் அதில் பதிவான எண்கள் குறித்து விசாரணை நடத்தினார். அதில் வார்டர் செல்போன் எண்ணில் இருந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு எந்த வித அழைப்பும் செல்லவில்லை.
இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போனில் பேசிய செல்போன் எண் மட்டும் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பது தெரிந்தது. அந்த எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த எண் ஏற்காடு பகுதியில் உள்ள ஒருவர் பயன்படுத்தி கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து சிறை போலீசார் நேற்று முன்தினம் ஏற்காடு போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்டவரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
பணி இடை நீக்கம்
அப்போது அவர் சிறையில் வார்டராக உள்ள விஜயகாந்த் என்பவர் எனது உறவினர். அவர் ஒரு சிம் கார்டு வாங்கித்தரும்படி தெரிவித்தார். அதன்படி புதிதாக ஒரு சிம்கார்டு வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் அந்த சிம்கார்டை எனது செல்போனில் போட்டு பேசிக்கொண்டு இருந்தார் என்று கூறி உள்ளார். இதையடுத்து வார்டர் விஜயகாந்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் உறவினர் செல்போன் எண்ணில் இருந்து கைதியின் மனைவியை தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜயகாந்தை பணி இடை நீக்கம் செய்து, கூடுதல் சூப்பிரண்டு வினோத் உத்தரவிட்டு உள்ளார்.
உறுதி செய்யப்பட்டது
இது குறித்து சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத்திடம் கேட்ட போது கைதியின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்ணிடம் ஆபாசமாக பேசுதல், சிறை விதிகளை பின்பற்றாமல் இருத்தல் ஆகிய குற்றத்திற்காக சிறை வார்டர் விஜயகாந்த் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று கூறினார்.