1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 2:30 AM IST (Updated: 15 Jun 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 12-ந்தேதி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் 541 தொடக்கப்பள்ளிகள், 176 நடுநிலைப்பள்ளிகள், 71 உயர்நிலைப்பள்ளிகள், 149 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 940 பள்ளிகள் உள்ளன. அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள் தவிர்த்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

பெற்றோருடன் வந்தனர்

அதன்படி, தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. அப்போது காலை முதலே மாணவ-மாணவிகள் உற்சாகமாக பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் சிலர் அழுது அடம் பிடித்தனர். பெற்றோரை பிரிந்து பள்ளிக்கு செல்ல மறுத்து பள்ளி வளாகத்திலேயே சில குழந்தைகள் அழுது புரண்டனர். இருப்பினும் பெற்றோர்கள் அவர்களை சமாதானம் செய்து வகுப்பறை வரை சென்று அமர வைத்தனர். வகுப்பறையிலும் அழுது கொண்டே அமர்ந்து இருந்தனர்.

இதற்கிடையே பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். சில பள்ளிகளில் ரோஜா பூக்கள் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்களின் உற்சாக வரவேற்பில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பரிவட்டம் கட்டி வந்தனர்

இதற்கிடையே உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியிலும் நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கின. அப்போது 1-ம் வகுப்பில் சேர்ந்த 20 மாணவ-மாணவிகளுக்கு பரிவட்டம் கட்டியும், கழுத்தில் மாலை அணிவித்தும், கையில் கும்பத்துடனும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். பாலார்பட்டியில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மண்டபத்தில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பள்ளிக்கு வந்தடைந்தனர். அங்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஆரத்தி எடுத்து, இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கி வரவேற்றார். இதில் ஆசிரியைகள் தெய்வசங்கரி, கலையரசி, தரணி மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story