வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிரகப்தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது ஹசீஸ் எனப்படும் கஞ்சா எண்ணெய் 5 லிட்டர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்திராநகரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32) என்பவர் கஞ்சா எண்ணைய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்தகுமாரை கைது செய்த போலீசார், 5 லிட்டர் கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.