ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை


ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
x

புதுக்கோட்டை புத்தக திருவிழா நிறைவு பெற்றது. ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

புதுக்கோட்டை

ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், புத்தக கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த நிலையில் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவிற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசுகையில், "புத்தக திருவிழாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. சிறைத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட அரங்குகளில் 3 ஆயிரம் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் பெற்ற கல்வி செல்வம் நம்மிடம் இருந்து குறையாது. இதேபோல அடுத்த ஆண்டு புத்தக திருவிழா இதனை விட பெரிதாக நடத்துவோம்'' என்றார்.

உடல் நலம் முக்கியம்

விழாவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அலுவலர் கவிதா ராமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதேபோல நடிகர் தாமு கலந்து கொண்டு ஏட்டு சுரைக்காய் எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது எனக்கூறுவது உண்டு. ஆனால் உடல் நலத்திற்கு சுரைக்காய் நல்லது.

இப்படி நல்ல விஷயங்களை எல்லாம் தப்பாக பேசி பழக்கப்பட்டு விட்டோம். புத்தகங்களை புரட்டி படிப்பதன் மூலம் வாழ்வில் முன்னேறலாம். உடல் நலத்தை பேண முடியும். ஆரோக்கியமாக வாழலாம். நமது குழந்தைகள் தான் அடுத்த தலைமுறைகள். அதனால் புகைப்பிடிப்பது, குடிப்பழக்கம் இருந்தால் கைவிடுங்கள். உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனியுங்கள்'' என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திருநாவுக்கரசர் எம்.பி. புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story