செந்தில் பாலாஜி கைது: பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை ஒடுக்கும் செயல்- துரை வைகோ பேட்டி
எங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை மிரட்டும் செயல், ஒடுக்கும் செயலாகத்தான் பார்க்கிறோம் என்று துரை வைகோ கூறினார்.
சென்னை,
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ சென்றார். ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க அவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ அல்லது மத்திய புலனாய்வுத் துறையோ சந்தேகத்தின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் யாரையும் விசாரணை செய்யலாம். சோதனை செய்யலாம் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களைக் குறித்த சம்பவம் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்றுள்ளது.
அவர் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. ஒரு மாநிலத்தின் அமைச்சர். நடு இரவு ஒரு மணிக்கு அவரைப் பிடித்து, கிட்டத்தட்ட இருபது மணி நேரத்திற்கும் மேலாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அமலாக்கத் துறையினர் அவரைத் துன்புறுத்தியதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். சோதனை செய்யுங்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யுங்கள்.
எங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை மிரட்டும் செயல், ஒடுக்கும் செயலாகத்தான் பார்க்கிறோம். எப்படி மேற்குவங்காளத்தில் நடந்ததோ, எப்படி கர்நாடகா காங்கிரஸ் முன்னணி தலைவரான சிவக்குமாருக்கு நடந்ததோ, அதேபோன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு நடந்த பிரச்சினை எல்லாமே மத்திய பா.ஜ.க. அரசின் மாநில அரசுகளை ஒடுக்கும் செயல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.