கார் சுத்தம் செய்யும் கருவியில் மறைத்து வைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பிடிபட்டது


கார் சுத்தம் செய்யும் கருவியில் மறைத்து வைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பிடிபட்டது
x

அபுதாபியில் இருந்து கார் சுத்தம் செய்யும் கருவியில் மறைத்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பிடிபட்டது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று விமானத்தில் இருந்து வந்திறங்கிய விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் கார் சுத்தம் செய்யும் பம்ப் கருவி ஒன்று இருந்தது. அந்த கருவி வழக்கத்துக்கு மாறாக கூடுதல் கனமாக இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது, அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட 9 வட்ட தகடுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேற்கொண்டு முழுவதுமாக அவற்றை பிரித்து பார்த்து சோதனை செய்த போது, நூதன முறையில் தங்க வட்ட தகடுகளை வெள்ளிமுலாம் பூசப்பட்டு மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 420 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story