தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு:குமுளியில் பஸ் நிலையம் கட்ட பூமி பூஜை:எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு:குமுளியில் பஸ் நிலையம் கட்ட பூமி பூஜை:எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:47 PM GMT)

குமுளியில் பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

தேனி

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான தமிழக எல்லை குமுளியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. ஆனால் பஸ் நிலையம் கிடையாது. இதனால் அனைத்து பஸ்களும் பயணிகளை சாலையோரம் ஏற்றி இறக்கி செல்கின்றன. இப்பகுதியில் கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதன்காரணமாக பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து குமுளில் புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரையிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து குமுளியில் பஸ் நிலையம் அமைக்க ரூ.5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் புதிதாக பஸ் நிலையம் கட்டுவதற்காக பூமி பூஜை தமிழக எல்லை குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜையை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை தென்மண்டல இயக்குனர் ஆறுமுகம், திண்டுக்கல் பொதுமேலாளர் டேனியல் சாலமன், மதுரை பொது மேலாளர் சமுத்திரம், கூடலூர் தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

18 வணிக வளாகங்கள், 11 பயணிகள் தங்கும் அறை, 2 நவீன கழிப்பறை வளாகங்கள், உணவு விடுதி, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஓய்வு அறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story