முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு விழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆடி கிருத்திகை

ஆடி மாதம் ஆன்மிகம் நிறைந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ஆடி கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை தினம் முருகப்பெருமானுக்கு உகந்ததாகும். முருகப்பெருமான் பிறந்தது விசாக நட்சத்திரம் என்றாலும் அவரை வளர்த்தெடுத்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாக மாறியது. மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில், ஆடி கிருத்திகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

முருகன் கோவில்கள்

புதுக்கோட்டையில் தண்டாயுதபாணி சாமி கோவில், குமரமலை முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கறம்பக்குடி

கிருத்திகை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சந்தன காப்பு அலங்காரத்தில், வெள்ளி கவசத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் உற்சவ மூர்த்திகளான வள்ளி, தேவசேனாவுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story