எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி
x

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்

தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் விவரம் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் குறித்து, அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டது. இதில் அவர்களது பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி அல்லது தோல்வி என்ற விவரம் அனுப்பப்பட்டது.

97.67 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 173 மாணவர்களும், 3 ஆயிரத்து 866 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 39 பேர் எழுதினர். இதில் 4 ஆயிரத்து 42 மாணவர்களும், 3 ஆயிரத்து 810 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 852 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.86 சதவீதமும், மாணவிகள் 96.86 சதவீதமும் என மொத்தம் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடம் பிடித்து சாதனை

கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.15 ஆகும். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு 0.52 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து இந்த ஆண்டு மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையறிந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளுக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிளஸ்-2 தேர்வு தேர்ச்சியில் கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 2 இடம் பின்தங்கி 3-வது இடத்தை பிடித்தது.

பிளஸ்-2-வில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பறிகொடுத்தாலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியில் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 96.31 சதவீதம் தேர்ச்சி பெற்று, 2-வது இடம் பிடித்துள்ளது.


Next Story