ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் புகார் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் தியாகர்சனபள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஒம்தேபள்ளி கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கங்கப்பா என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சரிவர தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் ஒம்தேபள்ளி கிராமத்தில் சிலர் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஊராட்சி தலைவர், கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்களை, சேதப்படுத்தி அகற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒம்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் அவர்களிடம் ஊராட்சி தலைவர் மீது புகார் மனு அளித்தனர்.
கிராம மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். மேலும், ஊராட்சி தலைவர் மீதான புகார் குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.