மண்எண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்
திருப்பாசேத்தி அருகே கடந்த 15 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியது. இதனால் மாணவ-மாணவிகள் மண்எண்ணெய் விளக்கில் படித்து வருகின்றனர்.
மானாமதுரை,
திருப்பாசேத்தி அருகே கடந்த 15 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியது. இதனால் மாணவ-மாணவிகள் மண்எண்ணெய் விளக்கில் படித்து வருகின்றனர்.
15 நாட்களாக மின்சாரம் இல்லை
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே வைகை மீனாட்சிபுரம் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அங்கு மின்சாரம் இல்லை. இதனால் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த காயத்திரி, ரேவதி ஆகியோர் கூறியதாவது:-
மண்எண்ணெய் விளக்கில் படிக்கிறார்கள்
எங்கள் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக பகலில் அரை கரண்டாக மின்சாரம் வருகிறது. இரவு ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. பகலில் பாதி அளவு எரிந்த மின்விளக்குகள் கூட இரவில் எரிவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மண்எண்ணெய் விளக்கில் பாடம் படித்து வருகின்றனர்.
இரவில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த 15 நாட்களாக இந்த நிலை தான் நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து சிவகங்கையில் உள்ள மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, தான் புதிதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன். சம்பந்தப்பட்ட கிராமம் எனக்கு சரியாக தெரியவில்லை.
ஆனால் 15 நாட்களாக மின்வினியோகம் இல்லை என்பதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.