அரசு பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் மாணவர்கள்


அரசு பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி தவிக்கும் மாணவர்கள்
x

ராவத்தநல்லூர் அரசு பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் இயற்கை உபாதையை கழிக்க திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவிகள் இயற்கை உபாதையை கழிக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது தவிர குடிநீர் வசதியும் ஏற்படுத்தி கொடுக்காததால் மாணவ-மாணவிகள் குடிநீர் தேடி அருகில் உள்ள தெருபகுதிக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் முழுமையாக கட்டவில்லை. இதனால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து பணம் வைத்து சூதாடுவது, மதுகுடிப்பது உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி எறிந்து உடைத்துவிட்டு செல்கின்றனர்.

நடவடிக்கை

பள்ளியின் முன்பகுதியில் உள்ள கழிவுநீர்கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நி்ற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் பள்ளி அருகில் பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் எந்தநேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மாணவ-மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story