சுரண்டை பகுதியில் கோடை மழை


சுரண்டை பகுதியில் கோடை மழை
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

சுரண்டை பகுதியில், திடீர் கோடை மழையால் ஆலமரம் சாய்ந்தது. தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை பகுதியில், திடீர் கோடை மழையால் ஆலமரம் சாய்ந்தது. தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்தது.

கோடை மழை

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சுரண்டை மற்றும் சுற்று பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் சேர்ந்தமரம் பசும்பொன் நகரில் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் பழமையான ஆலமரம் சாய்ந்தது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சேர்ந்தமரம் போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், மின் வாரிய பணியாளர்கள் வந்தனர். ரோட்டில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மின் இணைப்பு வழங்கினர்.

தென்னையில் தீ

சுரண்டை அருகே வாடியூர் தெற்கு தெருவை சேர்ந்த மரியஅருள் அந்தோணி மற்றும் கீழச் சுரண்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செயல் அலுவலர் ராஜா ஆகியோர் வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.

இதேபோல் இரட்டைகுளம் கிராமத்தில் கேபிள் ஒயர் அறுந்து விழுந்ததில் கால் தடுமாறி கடற்கரை என்பவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் சுரண்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Next Story