கடலூா் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: முகம் துல்லியமாக தெரியும்படி கேமராக்களை மாற்றி அமைக்க ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்


கடலூா் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு: முகம் துல்லியமாக தெரியும்படி கேமராக்களை மாற்றி அமைக்க ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முகம் துல்லியமாக தெரியும்படி மாற்றி அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்தார்.

கடலூர்

கடலூர் டவுன்ஹால் அருகில் செயல்படாமல் இருந்த புறக்காவல் நிலையம் புனரமைக்கப்பட்டது. இந்த புதிய புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புறக்காவல் நிலையத்தை நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் திறந்து வைத்து, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, ஒலிப்பெருக்கி மூலம் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் பரிமாற்றத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள்

கடலூரில் தற்போது புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதாவது முகம் துல்லியாக தெரியும் படி அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி வசதியும் உள்ளது. அதாவது புறக்காவல் நிலையத்தில் இருந்தபடி கடலூர் புதுநகர் போலீசாருக்கு ஒலிப்பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க முடியும்.

கடலூர் மாவட்டம் முழுவதும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் முகத்தை துல்லியமாக காணாதபடி அமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

இதனால் வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கண்காணிப்பு கேமராக்கள் ஆட்களை அடையாளம் காணும் வகையில் துல்லியமாக அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் வருங்காலத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, அமர்நாத் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story