தமிழக பட்ஜெட்: வரவேற்பும்-எதிர்ப்பும்


தமிழக பட்ஜெட்: வரவேற்பும்-எதிர்ப்பும்
x

தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் பட்ஜெட்டை வரவேற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.

கரூர்

பட்ெஜட்

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்கள், தொழில்துறையினர் கூறியதாவது:-

பொருட்களின் விலையை ஏற்ற கூடாது

குளித்தலையை சேர்ந்த பட்டதாரி பெண் லாவண்யா:-

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த தொகையானது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இத்திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி வசதி படைத்தவர்களுக்கு வழங்குவதை தவிர்த்து உரிய நபர்களை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அதுபோல அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

முன்னேற்றம் அடையும்

தோகைமலை அருகே நாகநோட்டக்காரன்பட்டி சேர்ந்த தொழலாளி ரவி:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் சாலைகளை மேம்படுத்தும் அரசின் திட்டம் சிறப்பாக அமைவதற்கு வாய்ப்பாக இருக்கும். ராணுவ வீரர்கள் உயிர் நீத்தால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீட்டுத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்பதும் பாராட்டுக்குரியது. தொழில்துறை, கல்வித்துறை, மருத்துவ கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.

மகளிருக்கு பயன் அளிக்கும்

வெள்ளியணை அருகே உள்ள செல்லாண்டிபட்டியை சேர்ந்த இல்லத்தரசி கீதா:-

இந்த பட்ஜெட்டில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட நிதி ஒதுக்கி இருப்பதும், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதும் மகளிருக்கு பயன் அளிப்பதாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1,500-மாக உயர்த்தப்பட்டிருப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள குளங்கள் ஊரணிகள், தூர்வாரி மேம்படுத்தப்படும் என்று அறிவிப்பு கிராமப்புறங்களில் நீர் ஆதாரத்தை அதிகப்படுத்துவதாக இருக்கும். இது தவிர மற்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது.

வரவேற்கிேறாம்

ெநாய்யல் பாலத்துறை பகுதியை சேர்ந்த இல்லத்தரசி பேபி:-

பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த பணம் மூலம் நாங்கள் பல்வேறு செலவுகளை செய்வோம். எங்களது கணவர்களை எதிர்பார்க்காமல் இருப்போம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் அந்தத் தொகையில் வாங்குவோம். இந்த உதவித் தொகை எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். பட்ஜெட்டில் அறிவித்திருப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்

கரூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன்:-

தமிழக நிதி பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து 2 ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது பாராட்டுக்குரியது. சிப்காட் தொழில் பூங்கா நிறுவ ரூ.410 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியது சிறப்பு. கிராம சாலைகள் 5,145 கிலோ மீட்டரை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி அறிவித்தது பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொழிற்சாலை ஊழியர்கள் 8.35 லட்சம் பேரை இணைத்திருப்பது நல்ல விஷயம். சிறு, குறு தொழில் துறைக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. கல்வித்துறையில் பள்ளிகள் நவீன கட்டிட நிதியாக ரூ.1,500 கோடி மற்றும் தொழில் கல்லூரிகளுக்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு வழங்கியது பாராட்டுக்குரியது.

ஜவுளி பூங்கா திட்டம் பாராட்டுக்குரியது

கரூர் வீவிங் அண்டு நெட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேசன் தலைவர் தனபதி:-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அடையும். சென்னை நகரத்தை போல் இந்த மாவட்டங்கள் மெட்ரோ சிட்டியாக மாறும். சேலத்தில் ஜவுளி பூங்கா திட்டம் அறிவித்திருப்பது பாராட்டப்படக்கூடியது. கரூருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைய இருப்பது, கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். சிறு குறு நடுத்தர தொழில்க்கு ரூ.1,509 கோடி ஒதுக்கி உள்ளார்கள் இதுவும் வரவேற்கத்தக்கது

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story