சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: மசோதாவை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்


சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: மசோதாவை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்
x

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை கவர்னர் ஆர்.என். ரவி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார்.

சென்னை

தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிமுகம் செய்தார்.

சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னர் தற்போது இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்-அமைச்சரே இருப்பார் என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதா தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார் .

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவிற்கும் சில விளக்கம் கேட்டு தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் இன்று தெரிவித்தார்.

மேலும், உரிய விளக்கத்துடன் மசோதா மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Next Story