தமிழ்நாடு அறிவுசார் நகரம் - ஆரம்ப கட்ட பணிகள் தொடக்கம்
கல்வியை மையமாகக் கொண்டு உலக தரத்திலான அறிவு சூழல் அமைப்பாக தமிழ்நாடு அறிவுசார் நகரை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக டிட்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வியை மையமாகக் கொண்டு உலக தரத்திலான அறிவு சூழல் அமைப்பாக தமிழ்நாடு அறிவுசார் நகரை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த நகரத்தில் அமைந்திருக்கும் என்றும் பசுமையான வாழ்விட சூழலில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த நகரம் திகழும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, வான்வழி மற்றும் பாதுகாப்பு, நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சியும் புத்தாக்கத்தையும் வளர்க்கும் பணிகளையும் தமிழ்நாடு அறிவுசார் நகரம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தை ஒட்டி 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம், இந்த நகரத்துக்கான விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசக நிறுவனத்தை நியமிப்பதற்கான டெண்டர் விட்டுள்ளது. டெண்டருக்கான இறுதிநாள் 14ஆம் தேதி என்றும் டெண்டர் 19ஆம் தேதி இறுதிச் செய்யப்படும் என்றும் டிட்கோ கூறியுள்ளது.