ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பின் நடந்தது
மிகவும் பழமையான சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், 18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட மிகவும் பழமையான சங்கமாகும். இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. அதன்பிறகு பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தேர்தல் நடந்தபோது, பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த சங்கத் தேர்தலை பலத்த பாதுகாப்புடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மூத்த வக்கீல் கபீர் நியமிக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கை
இவர் தலைமையிலான குழு, வக்கீல் சங்கத்தின் தேர்தலை 7 ஆண்டுகளுக்கு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடத்தியது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளம் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு நூறுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். காலை 10 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.
இந்த தேர்தல் நடவடிக்கை அனைத்தும் 2 பெரிய திரைகளின் மூலமாகவும், யூடியூப் மூலமாகவும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர், நேற்று இரவு தலைவர், செயலாளர் ஆகிய பதவிகளுக்கு பதிவான வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டது. மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.