கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் அரசின் வீடு ஒதுக்கவில்லை என புகார்
ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்காததால் அரசின் வீடு ஒதுக்கவில்லை என கூறி முதியவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும், அவர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முதியவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், பண்ருட்டி கீழ்மாம்பட்டை சேர்ந்த சிகாமணி (வயது 65) என்பதும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்காததால் வீடு ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிகாமணியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.