புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில்


அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரிக்கிறது.

புதுக்கோட்டை

வெயில் சுட்டெரிக்கிறது

கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயிலின் உக்கிரம் உச்சத்தை தொடும். இந்த காலத்தில் தான் வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே புதுக்கோட்டையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரமானது வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது.

பழ வகைகள்

புதுக்கோட்டையில் நேற்று வெயிலின் உக்கிரம் அதிகரித்திருந்தது. வெளியில் பொதுமக்கள் தலை காட்ட முடியாத அளவு இருந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் சிலர் துப்பட்டாவால் தலையை மூடியபடியும், குடைகளை பிடித்தப்படியும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்றதை காணமுடிந்தது. இதேபோல் சருமத்தை பாதுகாக்க கைகள் மற்றும் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி சென்றனர். இதேபோல் ஆண்கள் சிலர் குடையை பிடித்தப்படியும், தலையில் தொப்பியை அணிந்தபடியும் வெளியில் சென்றனர்.

இதற்கிடையில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழச்சாறுகளை அருந்தினர். மேலும் தர்பூசணி பழங்கள் உள்பட பழங்களை சாப்பிட்டனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்துகிற நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலை நினைத்து பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.


Next Story