புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயில்


அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் காலமான அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி நிறைவு பெற்றது. இருப்பினும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பு வெயிலின் தாக்கம் சற்று குறைந்துவிடும்.

ஆனால் புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் கடுமையாக அனத்துகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியில் செல்லும் போது கடும் அவதி அடைகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது முகத்தில் அனல் வீசுகிறது.

வீட்டிற்குள் முடக்கம்

அக்னி நட்சத்திரம் காலத்தில் பதிவான வெயில் அளவு தற்போதும் பதிவாகுகிறது. அடிக்கிற வெயிலை பார்த்து மக்கள் பலர் நேற்று வீட்டிற்குள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள் இருந்தாலும் வெப்ப தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை. இதற்கிடையில் இடையிடையே மின்வெட்டு பிரச்சினையாலும் மக்கள் சிரமமடைகின்றனர்.

மின் விசிறிகள் சுற்றினாலும் வெப்பம் இருக்கத்தான் செய்கிறது. வியர்வையும் வியர்த்து கொண்டே இருக்கிறது. ஏ.சி. வைத்திருப்பவர்கள் வீடுகளிலும் சற்று வெப்ப தாக்கத்தை உணருகின்றனர். வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சிலர் குடையை பிடித்தப்படியும், இரு சக்கர வாகனங்களில் சென்ற பெண்கள் முகம் மற்றும் தலையை சேலை, துப்பட்டாவால் மூடிய படியும், ஆண்கள் சிலர் தலையில் துண்டை முண்டாசு போல கட்டிக்கொண்டு சென்றதையும் காணமுடிந்தது.

வெயிலின் வெப்ப தாக்கத்தை சமாளிக்க நுங்கு, தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி சாப்பிட்டனர். மேலும் தாகம் தணிக்க கரும்புச்சாறு, பழச்சாறு உள்ளிட்ட ஜூஸ்வகைகளையும் குடித்தனர்.

வெயில் இன்னும் குறைந்தபாடு இல்லாததால் மக்கள் முனுமுனுத்து கொண்டு வருகின்றனர். வெயிலின் உக்கிரம் எப்போது குறையுமோ? என எதிர்பார்த்துள்ளனர்.


Next Story