திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த மாணவி


திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த மாணவி
x

பண்ருட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த மாணவிக்கு போலீசார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

கடலூர்

பண்ருட்டி,

கல்லூாி மாணவி

பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் புதுநகரை சேர்ந்தவர் வசந்தகுமார் மகள் அசீனா(வயது19). இவருக்கு பெற்றோர் இல்லாததால் அதே பகுதியில் உள்ள பாட்டி மாலா வீட்டில் தங்கி இருந்து கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம்.படித்து வருகிறார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தென்னரசு(27) என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தென்னரசு பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

திருமணத்துக்கு மறுப்பு

காதலி அசீனாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியதன் பேரில் காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தென்னரசுவை அசீனா வற்புறுத்தி வந்த நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

பின்னர் இது குறித்து அசீனா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி தென்னரசு மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த தென்னரசு, அசீனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

கோவிலில் திருமணம்

இதையடுத்து பண்ருட்டி போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தென்னரசு, அசீனாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அப்போது இரு தரப்பு உறவினர்களும் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்துக்கு மறுத்த காதலனை மாணவி போராடி கரம் பிடித்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story