மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்


மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்
x

மத்திய அரசு குறைத்தது போல் தமிழக அரசும் பெட்ரோலுக்கு ரூ.2, டீசலுக்கு ரூ.4 விலை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், 'உஜ்வாலா' திட்டத்தின்கீழ் ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள கியாஸ் இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு, தலா ரூ.200 மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்டு விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.

தமிழக அரசும் குறைக்க நடவடிக்கை

மத்திய அரசின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளன.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மேலும் ரூ.2 குறைக்கவும், டீசல் மீதான வரியை ரூ.4 குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு 2 தவணைகளாக பெட்ரோல் விலையில் ஒரு லிட்டருக்கு ரூ.13-ம் டீசல் விலையில் ரூ.16-ம் குறைத்துள்ளது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்த தமிழக அரசு, பெட்ரோலுக்கு ரூ.3-ஐ மட்டும் குறைத்துவிட்டு, டீசல் விலையை இதுவரை குறைக்கவில்லை.

தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை இந்த விடியா அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றாதது, தமிழக மக்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இப்போதாவது மக்களுடைய பிரச்சினையை உணர்ந்து மற்ற மாநிலங்களை போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து, தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரின் நலனையும் காக்க வேண்டும்,

மத்திய அரசு குறைத்தது போல், மாநில வரியில் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் உடனடியாக குறைக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story