சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை எட்டி பார்க்காத தண்ணீர்


சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை எட்டி பார்க்காத தண்ணீர்
x

மேட்டூர் அணை திறந்து 86 நாட்களாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டி பார்க்காததால் நாற்றுவிடும் பணியை கூட விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

மேட்டூர் அணை திறந்து 86 நாட்களாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டி பார்க்காததால் நாற்றுவிடும் பணியை கூட விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை

டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் கல்லணைக்கு வந்தடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறந்து 86 நாட்களை கடந்த நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடையில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டி பார்க்காமல் உள்ளது. இதனால் வறண்ட நிலையிலேயே ஏரிகள் உள்ளன.

வழக்கம்போல் இந்தாண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடைமடைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் ஆடிப்பட்டம் சம்பா சாகுபடி தொடங்கிவிடலாம் என மகிழ்ச்சியில் இருந்த கடைமடை விவசாயிகள் மத்தியில் ஏமாற்றமே மிஞ்சியது.

நாற்று விடும் பணியை தொடங்கவில்லை

5 நாட்கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.அதுவும் ஏட்டளவில் வெளியிட்ட அறிவிப்பாகவே போய்விட்டது. முறையாக தண்ணீர் கிடைக்காததால் இன்னும் நாற்றுவிடும் பணிகளை கூட தொடங்கவில்லை. இதே நிலை நீடித்தால் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுவது சந்தேகமே.

கடந்த ஜூன், ஜூலை,ஆகஸ்டு மாதங்களில் கடைமடையில் மழை பொய்த்து போய்விட்டது. கடைமடையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், கொரட்டூர், பள்ளத்தூர், நாடியம் போன்ற பகுதிகளில் பெரிய ஏரிகளும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு, சிறு குளங்களும் உள்ளன.

முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்

வழக்கமாக மேட்டூர் அணை திறந்தால் கடைமடையில் மழை பெய்யும் மழைநீரோடு மேட்டூர் தண்ணீரும் சேர்ந்து ஏரிகளில் நீர் நிரம்பும், ஆனால் இந்தாண்டு இதுவரை மேட்டூர் தண்ணீர் ஏரிகளை எட்டி பார்க்கவில்லை. ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் அளவிற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.

மழையும் பொய்த்துவிட்டது. தற்போது கடைமடையில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஏரிகள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்றமுடியும். எனவே ஏரிகள் நிரம்பும் அளவிற்கு 30 நாட்கள் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் ஏரிகளையும் ஓரளவு நிரப்பி விடலாம்.சம்பா சாகுபடிக்கு நாற்றுவிடும் பணிகளும் நிறைவடைந்துவிடும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story