பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு அமல்: தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா?


பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு அமல்: தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா?
x

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு தித்திக்குமா? என வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெரம்பலூர்

தீபாவளி என்றாலே தித்திக்கும் பண்டிகையாகும். அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை உண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு

இந்தநிலையில், தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு உண்டாகிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தித்திக்குமா? அல்லது திண்டாட்டமாக இருக்குமா? என்பது குறித்து கூறியதாவது:-

நேரக்கட்டுப்பாடு

பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரை சேர்ந்த லலிதா ரவி:- தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது அல்ல. ஆண்டுக்கு ஒரு முறை வரும் தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். பெரும்பாலான குழந்தைகள் காலையில் தாமதமாக தான் எழுந்திருப்பார்கள். இரவிலும் 7 மணிக்கு பெரும்பாலான குழந்தைகள் தூங்கி விடுவார்கள். இதனால் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளால் பட்டாசு வெடிக்க முடியாது. பட்டாசு வெடிக்க கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும்.

பசுமை பட்டாசு

செஞ்சேரியை சேர்ந்த பழனிசாமி:- தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து இருப்பது பெரும்பாலான மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் பொதுமக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளையும், பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நேரக்கட்டுப்பாட்டால் பட்டாசு விற்பனை குறையும்-வியாபாரிகள் கருத்து

பெரம்பலூர் செக்கடி தெருவை சேர்ந்த பட்டாசு கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன்:- கோர்ட்டு உத்தரவின் படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்த உத்தரவை மதிக்க வேண்டும். ஆனாலும் இதனால் கடைகளில் பட்டாசுகளின் விற்பனை குறையும். தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கும் வியாபாரம் பாதிக்கும். பட்டாசு வெடிக்க நேரத்தை இன்னும் அதிகரிக்கலாம்.

தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்கள்

தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்க தொலைபேசி எண்கள் வருமாறு:- பெரம்பலூர் பகுதி மக்கள் 9445086441, 04328-224255, 224101, வேப்பூர் பகுதி மக்கள் 9445086446, 04328-266400, 266101.

மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு

போலீசார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தாலும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

தீயணைப்பு அலுவலர் தகவல்

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கூறுகையில், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு நிர்ணயம் செய்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அந்த நேரத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடிக்க கூடாது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடையினை அணிய வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். வாளி நிறைய தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீக்காயத்திற்கு மை, வாழைச்சாறு, கிரீஸ், எண்ணெய் போன்ற எவ்விதமான திரவங்களையும் பயன்படுத்தக்கூடாது. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்தியபின் நீர் நிரம்பிய வாளியில் போட வேண்டும். ஈரமான பட்டாசுகளை சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும். குறைந்த ஓசை கொண்ட பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். பட்டாசுகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை அருகேயும், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையிலும் வெடிக்க செய்யக்கூடாது. பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக்கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க செய்யக்கூடாது.


Next Story