சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை வழங்கினார்
சின்னசேலம்
அறிவியல் கண்காட்சி
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 96 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 250 மாணவர்களின் 190 படைப்புகள் 36 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை பார்வையிட்ட கலெக்டர் படைப்பின் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
புதிய செயல் திட்டம்
தொடர்ந்து அவர் கூறும்போது, மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமுதாயத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அமையவேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல புதிய செயல் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
பின்னர் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச் சூழல் சார்ந்த பொருட்கள், உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்தில் புதுமை, வரலாற்று படைப்பு, கணித பயன்பாடு ஆகிய 7 தலைப்புகளில் உள்ள படைப்புகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் என 2 பிரிவுகளாக சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பங்கு பெற்ற மாணவர்களை ஊக்குவித்து சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
3 ஆயிரம் மாணவர்கள் பார்வை
இந்த கண்காட்சியை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்து 250 மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) துரைராஜ், உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, சிவகாமி அகாடமி கல்வியாளர் கோபி, நேர்முக உதவியாளர் ஆனந்தன், தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், அனிதா, சுற்றுச் சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஷ்ணு மூர்த்தி நன்றி கூறினார்.