சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளிகள்


சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளிகள்
x
தினத்தந்தி 19 March 2023 7:00 PM GMT (Updated: 19 March 2023 7:01 PM GMT)

அய்யலூர் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்ததால், சாலையோரம் தக்காளிகளை விவசாயிகள் கொட்டி சென்றனர்.

திண்டுக்கல்

தக்காளி விலை வீழ்ச்சி

வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தோட்டத்தில் விளையும் தக்காளிகளை அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது. இங்கு ஏலம் எடுத்து தக்காளிகளை வாங்கும் வியாபாரிகள் அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன் வரை தக்காளி கொள்முதல் நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். ஒரு சிலர் பறிக்கும் தக்காளிகளை சந்தைக்கு கொண்டு வராமல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர். அதையும் மீறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் மீண்டும் வீட்டிற்கு எடுத்து செல்ல மனமில்லாமல் சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். ஏலம் எடுத்து விற்பனையாகாத தக்காளிகளை ஏலச்சந்தை நிர்வாகிகளும் சாலையோரம் கொட்டும் அவல நிலையும் நீடிக்கிறது.

பதப்படுத்தும் நிலையம்

இதுகுறித்து ஏலச்சந்தை நிர்வாகிகள் கூறியபோது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில தக்காளிகளின் வரத்தும், உள்ளூர் தக்காளிகளின் வரத்தும் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் கூறியபோது, வரத்து அதிகமான நாட்களில் தக்காளிகளை உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அய்யலூரில் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது கிடப்பில் உள்ளது. அதனை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நாட்களில் தக்காளிகளை பதப்படுத்தி வைத்து விற்பனை செய்ய முடியும். எனவே அய்யலூரில் கட்டப்பட்டு வரும் உணவு பூங்கா பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story