பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்..!


பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்..!
x

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல்லின் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன.

இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதன்காரணமாக விடுமுறை நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் சுற்றுலா இடங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் குடிநீர், பயோ கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கி உள்ளன. இதனால் மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story