திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் போக்குவரத்து பாதிப்பு


திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் போக்குவரத்து பாதிப்பு
x

திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் ேபாக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சென்னை

நீட் தேர்வு

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 823 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து இருந்தனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காலை 10 மணி முதல் மாணவர்களின் பெற்றோர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையோரம் காத்து கிடந்தனர். மாணவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் வெளியே காத்து நின்றதால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் மாலையில் தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வந்தபோது அவர்களது பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதி உள்ளார்கள்? என்பதை கேட்கும் ஆவலில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே சாலையை மறித்தபடி நின்றனர்.

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை முழுவதும் பெற்றோர்கள் குவிந்து காணப்பட்டதால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story