சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் எதிரொலி:எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் நிறுத்தம்பயணிகள் கடும் அவதி


சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் எதிரொலி:எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் நிறுத்தம்பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 21 April 2023 7:00 PM GMT (Updated: 21 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் பெட்டிகள் நேற்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இது தொடர்பாக தென்மேற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்கள் நிறுத்தம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரெயில் நேற்று அதிகாலையில் தடம் புரண்டது. தர்மபுரி- ஓசூர் ரெயில்வே இருப்பு பாதையில் தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பெங்களூரு கோட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் விடப்பட்டுள்ளன.

அதன்படி சேலம்- யஸ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண்-16212) நிறுத்தப்பட்டுள்ளது. கோவை- லோக்மானியா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு குப்பம், பங்காருப்பேட்டை, மாலூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லாது.

ஓசூர், தர்மபுரி

அதேபோல் பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-12677) பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு திருப்பத்தூர் வழியாக செல்லும். இந்த ரெயில் ஓசூர், தர்மபுரி ரெயில் நிலையங்களுக்கு செல்லாது.

இதேபோல் பெங்களூரு- காரைக்கால் ரெயில் (வண்டி எண்-16529) திருப்பத்தூர் வழியாக செல்லும். இந்த ரெயில் பெலந்தூர் சாலை, கால்மேலராம், ஹெலாகி, ஆனேக்கல் சாலை, ஓசூர், கெலமங்கலம், பெரிய நாகதுணை, ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, சிவாடி, முத்தம்பட்டி, தொப்பூர், காருவள்ளி, செம்மாண்டப்பட்டி, ஓமலூர் ரெயில் நிலையங்கள் செல்லாது.

பயணிகள் கடும் அவதி

மேலும் நாகர்கோவில்- பெங்களூரு ரெயில் (வண்டி எண்-17236) சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லும். தர்மபுரி, ஓசூர் ரெயில் நிலையங்கள் செல்லாது. ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம் மார்க்கத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் தர்மபுரி, ஓசூர் சுற்றுவட்டார பகுதி பயணிகளும், பெங்களூரு பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.


Next Story