தனுஷ்கோடி கடற்கரையில் 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு


தனுஷ்கோடி கடற்கரையில் 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

கடந்த 4 மாதத்தில் தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் இட்டு சென்ற 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 2-வது கட்டமாக 335 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கடந்த 4 மாதத்தில் தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் இட்டு சென்ற 14 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 2-வது கட்டமாக 335 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆமைக்குஞ்சுகள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் சித்தாமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை உள்ளிட்ட 5 வகையான ஆமைகள் உள்ளன. அதுபோல் அழிந்து வரும் உயிரினங்களில் ஆமைகளும் ஒன்று என வனத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் ஆமைகளை அழிவிலிருந்து தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசனானது டிசம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இருக்கும். குறிப்பாக ஆமைகள் கடற்கரை மணல் பரப்பில்தான் குழி தோண்டி முட்டையிட்டு மணலால் மூடிவிட்டு கடலை நோக்கி சென்றுவிடும். ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் தானாகவே பொறித்து வெளியே வருவதற்கு 50-லிருந்து 65 நாட்கள் வரை ஆகலாம்.

கடலில் விடப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரை பகுதிதான் ஆமைகள் முட்டையிடுவதற்கு உகந்த பகுதியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தனுஷ்கோடி கடற்கரையில் பல்வேறு இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையால் சேகரிக்கப்பட்டு எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள ஆமை முட்டை பொரிப்பகத்தில் குஞ்சு பொரிப்பதற்காக கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முட்டை பொரிப்பகத்தில் இருந்து 335 குஞ்சுகள் தானாகவே பொரித்து வெளியே வந்தன. இந்த குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனவர் தேவகுமார், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

14 ஆயிரம் முட்டைகள்

குஞ்சுகளை கடலில் விடுவதற்கு முன்பாக ஆமை செல்லும் கடற்கரை மணல் பரப்பில் பூ தூவி ஆமை குஞ்சுகளை கடலுக்குள் வனத்துறையினர் வழி அனுப்பி வைத்தனர். மணல் பரப்பில் ஊர்ந்தபடி கடலை நோக்கி சென்ற ஆமை குஞ்சுகள் கடலை அடைந்ததும் நீந்தியபடி சென்றன. இதுகுறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் கூறும்போது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை தனுஷ்கோடி கடற்கரையில் ஆமைகள் இட்டு சென்ற 14,020 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 5 இடங்களில் ஆமைகள் இட்டுச் சென்ற 624 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 2,143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆமைக்குஞ்சுகளை தூக்கி சென்ற பருந்து

வனத்துறையினர் நேற்று மணல் பரப்பில் விட்ட ஆமைக்குஞ்சுகள் ஊர்ந்தபடி கடலை நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது வானத்தில் வட்டமிட்டபடி இருந்த பருந்து ஒன்று திடீரென கீழே பறந்து வந்து ஒரு ஆமைக்குஞ்சை தனது கால்களால் பிடித்து தூக்கி கொண்டு பறந்தது. இதேபோல் கடல் புறாக்களும் கடலின் மேற்பரப்பில் நீந்தியபடி சென்ற ஒரு சில ஆமைக்குஞ்சுகளை வாயால் கொத்தியபடி தூக்கி சென்றன. வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக 2 மாதத்திற்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக பராமரித்து அதை நேற்று கடலில் விட்ட நிலையில் பருந்து மற்றும் கடல் புறாக்கள் தூக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story