வேங்கடத்தம்மன் கோவில் தேரோட்டம்


வேங்கடத்தம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:45 PM GMT)

முருக்கேரி வேங்கடத்தம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

பிரம்மதேசம்,

மரக்காணம் அடுத்த முருக்கேரியில் பிரசித்தி பெற்ற வேங்கடத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிப்பட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் வழிபட்ட பலருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. மேலும் பிரசவத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதற்காக கர்ப்பிணிகளும் இ்க்கோவிலுக்கு வந்து அம்மனை வழிப்பட்டு செல்கின்றனர்.

இத்தைகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் வேங்கடத்தம்மன் எழுந்தருளினார்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வும், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருக்கேரி கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். பிரம்மதேசம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story